வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடன் கூடிய வானநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் வட திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம் ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.