யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் குடும்ப அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை பதற வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில், நேற்று (09.11.2024) மாலை ஏற்பட்ட விபத்துக்கு காரணமான பொலிஸாரின் தவறை மறைக்க பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்தப்பட்ட குடும்பத்தினர் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
எனினும், தங்கள் 2 மாத குழந்தை மற்றும் பெண்கள் உட்பட குடும்பத்தினர் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக கூறுகையில்,
“நாங்கள் எமது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, எங்களை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குளாகியது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குடித்து விட்டு வாகனம் செலுத்தியதால் தான் விபத்து ஏற்பட்டது. எங்களில் தவறில்லை எனவ அருகில் இருந்தவர்கள் கூறினர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் எனது கணவரிடம் வாகன அனுமதிப்பத்திரத்தை கேட்டனர். போக்குவரத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வராததால் எனது கணவர் வாகன அனுமதி பத்திரத்தை கொடுக்கவில்லை.
இதனையடுத்து, அவரை பொலிஸார் தாக்கினார்கள். தடுக்க முற்பட்ட என்னையும் தாக்கினார்கள். எனது 2 மாத குழந்தையை தூக்கி வீசினார்கள்.
இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இது குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.