பெரு நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் மின்னல் தாக்கியதில் ஜோஸ் அஹியுகோ டி லா குரூஸ் மிஜா என்ற வீரர் உயிரிழந்தார்.
பெரு நாட்டின் சில்கா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹூவான்கேயோ பகுதியில் பெல்லாவிஸ்டா மற்றும் சோக்கா ஆகிய இரு உள்ளூர் அணிகள் மோதின. 22 நிமிடங்கள் போட்டி நடந்ததில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா அணி முன்னிலையிலிருந்தது.
இந்நிலையில், திடீரென மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகோ டி லா குரூஸ் மிஜா என்ற 39 வயதுடைய வீரர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உடனடியாக கீழே விழுந்துள்ளார். அவர் தவிர, குறைந்தது 8 பேர் மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக குரூஸ் மிஜா உட்பட பாதிக்கப்பட்ட வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும் முன்னதாகவே குரூஸ் மிஜா உயிரிழந்து விட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
குரூஸ் மிஜா தனது கையில் உலோக கைச்சங்கிலி (Bracelet) ஒன்றை அணிந்திருந்தார் என்றும் அதனால், மின்னல் அவரை தாக்கியிருக்கக் கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.