பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளில் ஆபத்தான போர்த்துகீசு மேன் ஓ வார்கள் எனும் கடல் உயிரினம் மிக அதிக அளவில் காணப்படுகின்றமையை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கையில், கடந்த வருடத்தை விட 16 சதவிகிதம் அதிகமாக 280 போர்த்துகீசு மேன் ஓ வார்கள் பிரித்தானிய கடலோரங்களில் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போர்த்துகீசு மேன் ஓ வார்களை பலர் ஜெல்லிபிஷ் என தவறாக எண்ணினாலும், இது ஒரு சைப்போனோஃபோர் எனப்படும் சிறிய ஜூவாய்டுகளின் காலனி ஆகும். அவை அனைத்தும் ஒரு விலங்கைப் போல ஒன்றாக வேலை செய்கின்றன.
குறித்த உயிரினத்தினமானது நீல – மஞ்சள் நிறக் குடை போன்ற நீளமான உடலையும் நீண்ட நஞ்சு நிறைந்த கூந்தல்களையும் கொண்டுள்ளது. இந்த உயிரினத்தின் நஞ்சு சிறிய மீன்கள் மற்றும் ஒட்டுண்ணி உயிரினங்களை பலவீனமாக்கும் திறன் கொண்டது.
இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு வல்லுநர்கள் இதனை எச்சரிக்கையாகக் கவனிக்க வேண்டியவையாகக் கூறுகின்றனர்.
அதன்படி, அதன் மேல் இருக்கும் நச்சுக் கூந்தல்கள் மனிதர்களுக்கு ஆபத்தாக அமையக்கூடும் என்றும் இவற்றின் விஷம் உடல் மேல் புண்கள் ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்த உயிரினத்தின் விஷம் மனிதர்களின் உயிருக்கு ஆபத்தானதாக அமைந்ததாக இதுவரை அறியப்படவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.