நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .
இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
5 தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்களை அதிகளவு மேம்பாலங்கள் கொண்ட அந்த வீதியில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் லொறி சாரதி லொறியை ஓட்டிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.