போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள். மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும் கொண்டிருந்தோம்.
இந்தப் பண்பாட்டு மரபே காலநிலை மாற்றங்களின் தாக்குதல்களில் இருந்து எம்மையும் எம் பூமியையும் காப்பாற்றும். அந்த வகையில் மாவீரர்களைப் போற்றும் இப் புனித கார்த்திகையில்; பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலகம் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் தலையாய பிரச்சினையாகக் காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. பூமியின் சராசரி வெப்பநிலை ஆண்டுக்கு ஆண்டு தீவிரமடைந்து வருகிறது. காட்டுத்தீயும் வெப்ப அலைகளும் முன்னெப்போதையும் விட மூர்க்கம் கொண்டு பொசுக்கி வருகிறது. இன்னொருபுறம், பருவம் தப்பிக் கடும் மழை கொட்டுகிறது.
வருடாந்த மழை வீழ்ச்சி ஓரிரு நாட்களிலேயே கடும் மழையாகப் பொழிகிறது. இவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கிலும் மண்சரிவிலும் சிக்கி உலகம் பூராவும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள்.
துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வருவதன் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து செல்கிறது. இதனால் உலகநாடுகள் பலவற்றின் கரையோரங்களைக் கடல்நீர் விழுங்கத் தொடங்கியுள்ளது. இதற்கு இலங்கைத் தீவும் விதிவிலக்கல்ல.
கடல் மட்ட உயர்வால் யாழ். குடாநாட்டின் ஆனையிறவுப் பகுதி கடலால் துண்டிக்கப்பட்டுத் தனித் தீவாக உருவாகும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. உலகம் இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ள இந்த அவலங்களுக்குக் கரிக்காற்றை உறிஞ்சுகின்ற காடுகளை அளவுகணக்கில்லாமல் நாம் அழித்துத் தள்ளுவதே அடிப்படைக் காரணமாகும்.
பூமி சூடாகி வருவதன் எதிர் விளைவுகளாகக் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீருக்காக நெடுந்தொலைவு அலைய வேண்டி ஏற்படும். பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். கால்நடை வளர்ப்பைக் கைவிடவேண்டி ஏற்படும். வளியில் மாசுக்கள் அதிகரித்துச் சுவாச நோய்களால் மூச்சுத்திணற வேண்டி ஏற்படும்.
மனஅழுத்தம் ஏற்பட்டுத் தற்கொலை உணர்வு தூண்டப்படும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கு இப்போதிருந்தே நாம் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் தாங்கொணாத் துயரங்களை அனுபவிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.