தமிழ்த் தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டு தேசியமா, அபிவிருத்தியா என்ற இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக ரெலோ கட்சியின் செயலாளரும், ஜனநாயக தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமன ப.உதயராசா தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமது கட்சியின் வன்னி மாவட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டு சட்டப் போராட்டத்தின் பின் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்கி மூன்றாந் தரப்பை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அந்தவகையில் நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் எந்தக் கட்சியுடனும் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர்.
குறிப்பாக ஊழல் அற்ற ஒரு ஆட்சியினை உருவாக்கும் நோக்குடன் கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் செயற்ப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற் உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைக்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகளால் நான் தோல்வியடைந்திருந்தேன். அந்தவகையில் இம்முறை நாம் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகின்றோம். எனவே இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை அவர் உருவாக்குவாரானால் அவருடன் இணைந்து செயற்ப்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். மாறாக மீண்டும் ஒரு நெருக்கடி நிலை நாட்டில் ஏற்படுமாக இருந்தால் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்கமாட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடு முழுவதும் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகின்றனர். அந்த அடிப்படையில் பலர் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளனர். தமிழ்த் தேசிய உணர்வோடு நாங்கள் இந்த சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்த மக்களின் நிலைப்பாடு அவர்களுக்குள் ஏற்ப்பட்ட பிரிவுகளால் வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே இம்முறை வன்னியில் பெரும்பாண்மை ஆசனங்களை எந்தகட்சிகளும் எடுக்க கூடிய நிலமை இல்லை.
அந்த அடிப்படையில் குறைந்த வாக்குகளை எடுத்தாலே ஒரு ஆசனம் எடுக்கக்கூடிய நிலை இருக்கிறது. அந்த வகையில் நாம் கடந்த தேர்தலில் எடுத்த வாக்குகளை பெற்றாலே ஒரு ஆசனம் பெற்றுக்கொள்வோம்.
இருப்பினும் இம்முறை நாம் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். தமிழ்த் தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டு தேசியமா அபிவிருத்தியா என்ற நிலைப்பாட்டில் இன்று உள்ளதை காணமுடிகின்றது.
அந்தவகையில் நாட்டில் அதிக இடங்களில் போட்டியிடும் மூன்றாவது கட்சியாக எமது கூட்டணி உள்ளது. இம்முறை நேரடியாக போட்டுயிட்டு வெற்றி பெறுவோம். மாறாக தேசியபட்டியல் ஆசனம் எதனையும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் எமக்கு இல்லை என்றார்.