நாட்டிலிலுள்ள அனைத்து வெளிநாட்டுப் பயணிகளது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறுகம்பை பிரதேசத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரித்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
இந்தநிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்த நிலையில், இலங்கை நாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புலனாய்வு அமைப்புகள் இது தொடர்பாக ஆய்வு செய்தனர். இதனையடுத்து அக்டோபர் மாதம் 07ஆம் திகதி இது தொடர்பான உளவுத்துறை தகவல் எமக்கு கிடைத்தது.
சில வெளிநாட்டு பிரஜைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபையில் பேசப்பட்டது.
இது தொடர்பில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, வெளிநாட்டவர்கள், அவர்கள் உள்ள இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தனர். இந்த விசேட பாதுகாப்புத் திட்டம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.