நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 30 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் 20 முதல் 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் வெளி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருட்களுடன் முகப்புத்தக (பேஸ்புக்) களியாட்ட நிகழ்வொன்று நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 6 கிராம் 90 மில்லி கிராம் கேரள கஞ்சா, 12 போதை மாத்திரைகள், 1380 மில்லி கிராம் குஷ் போதைப்பொருள், 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 150 மில்லி கிராம் கொக்கைன் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றை வைத்திருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஆண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.