வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபை மைதனமானது நகரில் உள்ள பிரதான மைதானமாகும். அங்கு விளையாட்டு வீரர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளிலும், நடை பயிற்சிகளும் பலரும் ஈடுபட்டு வருவதுண்டு.
இந்நிலையில், குறித்த மைதானத்தில் மண் சீரான முறையில் பரவப்படாமையால் நடை பயிற்சி மேற்கொள்ள முடியதவாறு காணப்படுவதுடன், மழை நேரங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.
மைதானத்தின் சில பகுதிகள் புற்கள் நிறைந்ததாக காணப்படுவதுடன், அதில் விசப் பாம்புகளும் காணப்படுகின்றன. மைதானத்திற்கு வருபவர்கள் ஓய்வு எடுப்பதற்க உள்ள இருப்பிடங்கள் உடைந்து காணப்படுகின்றன. அத்துடன் குறித்த மைதானத்திற்குள் கால்நடைகள் வருவதனால் மைதானம் மேலும் அசுத்தமாகவும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக நடைபயிற்சி மற்றும் உடற் பயிற்சிகளுக்கு செல்லும் சிறுவர்கள், மாணவர்கள், பெரியோர் எனப் பலரும் அங்கு செல்வதை தவிர்த்து வருவதுடன், மாவட்டத்தின் பிரதான மைதானத்தில் நிலை கண்டு கவலையடைந்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்தி மக்களுக்கான சேவையை சிறப்பாக வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளனர். இதேவேளை, குறித்த மைதானத்திற்கான மின் ஓளி காணப்படுவதுடன் அது காலை 8 மணி வரை ஒளிந்து கொண்டு இருப்பதால் மின் வீண் விரயம் செய்யப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.