மோசமான வானிலை காரணமாக அவசரநிலை ஏற்பட்டால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விமானம் மற்றும் தொடர்புடைய படையினரை தயார் நிலையில் வைக்குமாறு இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்குமாறு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, அறிவுறுத்தியுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.
பேரிடர் சூழ்நிலைகளை வானத்தில் இருந்து கண்காணிக்கவும், கண்காணிப்பு விமானங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் அவர் விமானப்படைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அனர்த்தம் ஏற்பட்டால் மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மூன்று உலங்குவானூர்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், மீட்புப் பணிகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் சிறப்புப் படை வீரர்களும் அந்த முகாம்களில் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
ரத்மலானை விமானப்படை தளத்தில் ‘பெல்-412’ ரக உலங்குவானூர்தி ஒன்றும், ஹிகுராக்கொட விமானப்படை தளம் மற்றும் பலாலி விமானப்படை தளம் ஆகியவற்றில் இரண்டு ‘பெல்-212’ ரக உலங்குவானூர்திகள் விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.