கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (05) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்று வருகின்றது.
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.
இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளின் பட்டங்களையும் உறுதிசெய்துள்ளார். இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் (யாழ்ப்பாணம்) ஸ்ரீ சாய் முரளி அவர்கள் இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக அதிகூடிய எண்ணிககையிலான மாணவர்கள் இம்முறை பட்டம் பெற்றுள்ளனர். ஏறத்தாழ 2340 உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் இம்முறை பொதுப் பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்க உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் – பேராசிரியர் கலாநிதி வ.கனகசிங்கம் தெரிவித்தார்.
பிரதி உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி ரீ.பிரபாகரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
பட்டமளிப்பு விழாவின் 1ம் நாளில் முதலாவது அமர்வின் போது இரு கலாநிதிப்பட்டம், ஒரு முதுதத்துவமாணி, இரு விஞ்ஞான கல்வியில் முதுமாணி, ஒரு விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, 58 கல்வியியல் முதுமாணி, 04 கலை முதுமாணி, 05 வியாபார நிர்வாக முதுமாணி, 31 அபிவிருத்தி பொருளியல் முதுமாணி, மற்றும் 153 இளங்கலைமாணிப் பட்டங்கள் (வைத்தியமாணி,சத்திரசிகிச்சைமாணி, சிறப்பு தாதியியல் விஞ்ஞானமாணி, தாதியியல் விஞ்ஞானமாணி, சிறப்பு விவசாய விஞ்ஞானமாணி, விவசாய விஞ்ஞானமாணி) போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
வணிக நிர்வாகமாணி, சிறப்பு வணிக நிர்வாகமாணி, சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வணிக நிர்வாகமாணி, சிறப்பு வணிகவியல்மாணி, வணிகவியல்மாணி, கணக்கீடு மற்றும் நிதியியல் சிறப்பு வணிகவியல்மாணி, வணிக பொருளியல் சிறப்பு வணிகவியல்மாணி, விஞ்ஞானமாணி, சிறப்பு விஞ்ஞானமாணி எனும் வகையில் 333 பட்டங்களும், சித்தமருத்துவம் – சத்திர சிகிச்சை இளமாணி, சிறப்பு விஞ்ஞானமாணி, கணினி விஞ்ஞானமாணி விவசாய தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மையில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப கௌரவ இளமாணி, தொடர்பாடல் கற்கைகளில் கலைமாணி, மொழியியல் கலைமாணி, எனும் வகையில் 424 பட்டங்களும், மற்றும் நுண்கலைமாணி – இசை நுண்கலைமாணி, நடனம் நுண்கலைமாணி, நாடகமும் அரங்கியலும் நுண்கலைமாணி, கட்புலமும் தொழிநுட்பவியல் கலையும் எனும் வகையில் 204 பட்டங்களும் முதலாம் நாளில் 2வது 3வது 4வது அமர்வுகளில் வழங்கப்பட்டுள்ளன.