திருவிழாவின் போது புனித குளங்களில் நீராடிய 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பீகாரில் இடம்பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து கொண்டாடும் பண்டிகை ஜிவித்புத்ரிகா.
இந்த பண்டிகையின் போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடுவது வழக்கம். அவ்வாறு புனித நீராடியபோது பீகாரில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 37 குழந்தைகள் உட்பட மொத்தம் 46 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காணாமல் போயுள்ளதாக பீகார் அரசு இதனை நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை 15 மாவட்டங்களில் மொத்தம் 43 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மீதமான 6 பேரை தேடும் பணியில் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர்.