சென்னையில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். இரண்டாவது இன்னிங்ஸில் ப அவர் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
அஸ்வின் தன்னுடைய 38 வருடம் 2 நாட்கள் வயதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வயதில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 1955ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக பெசாவர் நகரில் நடைபெற்ற போட்டியில் முன்னாள் இந்திய வீரர் வினோ மன்கட் 37 வருடம் 306 நாட்களில் 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அந்த 68 வருட சாதனையை தற்போது உடைத்துள்ள அஸ்வின் இப்போட்டியையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 10 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய வரலாறு படைத்துள்ளார்.
1. ரவிச்சந்திரன் அஸ்வின்: 20*
2. சச்சின் டெண்டுல்கர்: 19
3. ராகுல் டிராவிட்: 15
4. அனில் கும்ப்ளே: 14
5. விரேந்தர் சேவாக்/விராட் கோலி: தலா 13
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது அஸ்வின் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஷகிபுல் ஹசன் விக்கெட்டை வீழ்த்திய பிறகு மேற்கு இந்திய வீரர் ஜாம்பவான் கோர்ட்னி வால்சின் சாதனையை அஸ்வின் தற்போது முறியடித்திருக்கிறார்.
132 போட்டிகளில் விளையாடிய வால்ஸ் 519 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அஸ்வின் தற்போது 101 டெஸ்டுகளில் 522 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவுஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயனின் சாதனையை முறியடித்து விடுவார். நாதன் லயான் தற்போது 129 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 530 விக்கெட்டுக்குடன் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இதேபோன்று அஸ்வின் இன்னொரு சாதனையை செய்து இருக்கிறார்.
அதாவது ஒரே மைதானத்தில் ஒரு போட்டியில் சதம் மற்றும் ஐந்து விக்கெட்டுகளை இரண்டு முறை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்திருக்கிறார். இப்படி ஒரு ரெக்கார்டை 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே செய்ததில்லை.