தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா, தமிழகச் சட்ட சபைக்கு பயணம் செய்ததோடு சட்டப் பேரவை தலைவர் JCD பிரபாகர் அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக அமையப் பெற்றுள்ள அரசாங்கத்துக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தமிழக சட்ட சபையில் தமது நம்பிக்கைப் பிரேரணையை 144 வாக்குகளினால் உறுதி செய்துள்ள நிலையில் அதற்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் முகமாக தமிழக சட்டசபையின் தலைவரைச் சந்தித்து மேற்படி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன்போது ‘”ஒரு கோப்பைத் தேநீர்” – மலையக மக்களின் மறக்கப்பட்ட கதை எனும் நூலையும் நினைவுப் பரிசாக வழங்கி வைத்தார்.
மேலும் தமிழக மக்களின் அமோக வாக்குகளால் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்கர்களுக்கான வாழ்த்துச் செய்தியை சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் ஊடாகவும் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்குமான பாரம்பரிய உறவின் நீட்சியாக எப்போதும் உணர்வுகளால் ஒன்றிணைந்த இலங்கைத் தமிழ் மக்கள் உங்கள் வெற்றிக்கு தமது கொண்டாடங்களால் உவகை சேர்த்துள்ளனர்.
இலங்கை நிலையில் இந்தியா எனும் நாடு பெரிய அண்ணனாகவும், தமிழ்நாடு தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணாகவும் போற்றப்படுகிறது. இந்த தமிழ் மண்ணின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தாங்கள்
• தமிழ் நாட்டில் தாயகம் திரும்பிய தமிழர்களாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான காலம் வாழ்ந்துவரும் இலங்கை மலையகத் தமிழர்கள் தமிழ் நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து வாழக்கூடிய கௌரவமான நிலையை அடைவதற்கு தமிழ்நாட்டு அரசவையில் தீர்மானம் எடுக்கவும்,
• தாய்த் தமிழ்நாட்டில் நாடற்றவர்களாக இலங்கைத் தமிழ் ஏதிலிகளாக வாழும் இலங்கை அகதிகளுக்கான இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக் கொடுக்க, மத்திய அரசிடமிருந்து தீர்வினை பெற ஆவன செய்வதோடு,
• இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை நேரடியாக அணுகி சுமூகமான தீர்வினை எட்ட இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும்,
தங்களது நல்லாட்சியில் அக்கறை கொள்வீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் தங்கள் மீது அன்பைப் பொழியும் தமிழர்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு என இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்பாக வெற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










