கடற்றொழில் அமைச்சர் கடந்த 24.04.2025அன்று தமது கட்சி சார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீவு – கேப்பாப்புலவுப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கேப்பாப்புலவு மீனவ சங்கத் தலைவர் செபஸ்ரியாம்பிள்ளை சுகிர்தன் கடற்றொழில் அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இவ்வாறு தாக்கப்பட்ட கேப்பாப்புலவு மீனவ சங்கத் தலைவரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 26.04.2025 இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சரும் அவருடைய சகாக்களும் மக்களோடு எவ்வாறு அணுகுவது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டுமெனவும், இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கேப்பாப்புலவுப் பகுதிக்கு கடந்த 24.04.2025 நேற்று முன்தினம் கடற்றொழில் அமைச்சர் வருகைதந்தபோது, கேப்பாப்புலவு மீனவ சங்கத் தலைவர் செபஸ்தியாம்பிள்ளை சுகிர்தன் அப்பகுதி மீனவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் வீதி சீரின்றிக் காணப்படுவது தொடர்பிலும், அவ்வீதியைச் சீரமைத்துத் தருமாறும் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதன்போது கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த அமைச்சர்கள், ஆட்சியாளர்களும் குறித்த வீதியைச் சீரமைத்துத் தருவதாக தெரிவித்திருந்தும் இதுவரை குறித்த வீதி சீரமைக்கப்படாமல் உள்ளமை தொடர்பிலும் மீனவ சங்கத் தலைவர் செபஸ்ரியாம்பிள்ளை சுகிர்தன் கடற்றொழில் அமைச்சருக்குச் சுட்டிக்காடியுள்ளார்.
இதன்போது அமைச்சருடன் வருகைதந்தவர் மீனவ சங்கத் தலைவரை தாக்கியுள்ளார்.
குறித்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். கடற்றொழில் அமைச்சரும் அவருடன் வருகைதந்த அவரின் சகாக்களும் முதலில் மக்களுடன் எவ்வாறு அணுகுவதென முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
இங்கு வருகைதந்து இவ்வாறு அட்டகாசம் செய்த கடற்றொழில் அமைச்சருக்கும், அமைச்சரின் சகாக்களுக்கும் கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களின் வாழ்கை வரலாறு தெரியாதென நினைக்கின்றேன்.
இங்குள்ள மக்கள் எவ்வாறு உறுதியாகவும், திடமாகவும் தமிழ்த் தேசியம் சார்ந்து நிற்பவர்கள் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சரும், அவருடைய சகாக்களும் தாக்கிவிட்டுச் செல்கின்ற அளவிற்கு கேப்பாப்பிலவு மக்கள் கோழைகள் அல்ல. நாட்டின் கடற்றொழில் அமைச்சர் என்பதற்காக மரியாதை நிமித்தம் இப் பகுதியிலிருந்து அவர்களை திரும்பிச் செல்ல அனுமதித்து இருக்கின்றனர். இவ்வாறான அடாவடித்தனங்களுடன் இங்குவந்து செயற்படமுடியாது என்பதை எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
மக்களுடன் மக்கள் பிரதிநிகளாக, உரியமுறையில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அணுகவேண்டும். இவ்வாறு அடாவடித்தனமாக செயற்படக்கூடாதென்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடம் பேசுவதுடன், அதற்கு மேலாக ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்துவதற்குரிய நடவடிக்கையும் மேற்கொள்வேன்.
முல்லைத்தீவிற்கு வருகைதந்து இவ்வாறு அடாவடித்தனமாகச் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.





