“அரசியல் தீர்வைக் கோரி வருவதை, முற்றாக அவ்வாறு ஒரு தேவை இல்லை. தமிழ் மக்கள் சில சலுகைகளுக்காக மாத்திரம் தான் அரசியல்வாதிகளை நாடுகின்றார்கள் அல்லது அரசியல் ரீதியான பிரச்சினைகள் இல்லை என்று சொல்லுவதற்காகவே தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்காக முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்” என இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சீலாமுனைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மட்டக்களப்பு மாநகரசபைக்கு போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலக திறப்பு நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட தமிழரசுக் கட்சியின் 11 ஆம் வட்டார சீலாமுனை, பெரிய உப்போடை மற்றும் சின்ன உப்போடை வேட்பாளர் த.நடராசா சுதர்சன் தலைமையில் சீலாமுனையில் நடைபெற்றது. இதன்போது மக்களுடனான சந்திப்பு நடைபெற்றதுடன் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இதே போன்று தமிழரசுக்கட்சியின் கறுப்பங்கேணி,ஜெயந்திபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 06 ஆம் வட்டார வேட்பாளர் புஸ்பராஜா தனுஸபிரதீப் அவர்களின் தேர்தல் அலுவலகம் நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மாவட்ட கிளைத் தலைவருமான இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்,” இந்த நாட்டிலே தமிழ் மக்கள் நிரந்தரமான அரசியல் தீர்வு தேவை இல்லை. தமிழ் மக்கள் சில சலுகைகளுக்காக மாத்திரம் தான் அரசியல்வாதிகளை நாடுகின்றார்கள் அல்லது அரசியல் ரீதியான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இல்லை என்று சொல்லுவதற்காகவே தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்கான முயற்சியாக ஜனாதிபதியும், பிரதமரும் செயற்பட்டு வருவதாக” இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
“இந்தச் சந்திப்பிலே நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது மட்டக்களப்பு மாநகர சபைக்குள் தமிழரசு கட்சிக்கு இம்முறை மக்கள் ஆணையை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள். ஏன் என்றால் நாடாளுமன்றத்தில் 3 நாடாளுமன்ற பிரதிநிதிகளை வைத்துக் கொண்டு மக்களுடைய பிரச்சினைகளை சிறப்பாக முன்வைத்துக் கொண்டு வரும் கட்சி என்கின்ற அடிப்படையில், எங்களுடைய மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களுடைய கட்சிக்கு உள்ளூராட்சி மன்றத்தினுடைய ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.
மிக முக்கியமாக உங்களுக்கு தெரியும் மாநகர சபையில் அதிகளவான வளங்கள் காணப்படுகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாநகர சபையினுடைய காலம் முடிவடைந்ததன் பின்னர் அந்த மாநகர சபைக்குள் இருந்த பல நிதிகளை எடுத்து முன்னாள் ராஜாங்க அமைச்சர்களாக இருந்த பிள்ளையான் போன்றோர் பல துஷ்பிரயோகங்கள் செய்திருந்தார்கள். இந்த மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் பல வளங்களை எடுத்து பல சட்ட விரோதமான செயல்கள் நடந்து இருக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்த விடயங்களை நேர்மையாக கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாநகர சபைக்குள் நான் நினைக்கின்றேன் மிக நேர்மையாக செயற்பட்ட உறுப்பினர்கள் என்றால் இலங்கை தமிழரசு கட்சி சேர்ந்த உறுப்பினர்கள் தான்.
உண்மையில் மாநகர சபை எல்லைக்குள் எதுவிதமான சட்டவிரோத செயல்களுக்கு அனுமதிகள் வழங்கவும் இல்லை, எதிர்வரும் மாநகர சபையிலும் வழங்கப் போவதும் இல்லை. எமது கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்த விடயங்களை பற்றி தெரிந்தவர்கள் இன்று சில கட்சிகளைப் பார்த்தீர்கள் என்றால் உறுப்பினர்களாக களம் இறங்கி இருப்பவர்களுக்கு, அவர்களுடைய வட்டாரங்களுக்குள் அவர்களையும் தெரியாது. வட்டாரத்தை பற்றி வேட்பாளர்களுக்கும் தெரியாது.
சில வேளைகளில் திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களிக்கின்ற மக்கள் கூறுகின்றார்கள், அனுரவுக்காக நாங்கள் திசைகாட்டிக்கு வாக்களிக்க முடியாது. நாளை தினம் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக சீலாமுனையில் அனுரகுமார திசாநாயக்க வந்து பார்க்கப் போவதில்லை. அத்தோடு அவர்களது வேட்பாளர்களுக்கும் இந்த பிரதேசத்தைப் பற்றி தெரியாது. அந்த வகையில் நாங்கள் இந்த மாநகர சபையில் இருக்கும் வளங்களைக் கொண்டு இந்த மாநகர சபையில் சிறந்த ஆட்சியை மேற்கொள்ள பல வளங்கள் காணப்படுகின்றன. சீலாமுனை பகுதியிலே சொல்லப்பட்ட ஒரு விடயம், இப்பகுதி ஆற்றங்கரை ஓரத்தைக் கொண்டு ஒரு சுற்றுலாத்தலமாக அபிவிருத்தி செய்வதான சிறந்த முன்மொழிவுகளை எமது வட்டார வேட்பாளர்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள். இந்த விடயங்களை எல்லாம் நாங்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தால், மாநகர சபை எல்லைக்குள் வருமானங்களை அதிகரிக்கக் கூடிய சில திட்டங்களாக அவற்றை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதே வேளையில் தான் நாங்கள் மாநகர சபையில் எவ்வாறாவது எங்களுடைய மாநகர சபையில் தமிழரசுக் கட்சி தமிழ் தரப்பு நாங்கள், வடக்கு கிழக்கில் இருக்கின்ற நமது தமிழர் தாயகத்தில் இருக்கின்ற மக்களைத் தான் வாக்களிக்க கூறி வருகின்றோம். ஆனால் இன்று தேசிய கட்சிகளை பார்த்தீர்கள் என்றால் என். பி. பி கட்சியின் உடைய அமைச்சர்கள் 20 அமைச்சர்களில் =8 அமைச்சர்கள் இன்றைய நாளில் வடமகாணத்தில் இருக்கின்றார்கள் முல்லைத்தீவில் வட்டாரக் கூட்டங்களை அமைச்சர்கள் நடத்துகிறார்கள். சில இடங்களில் தேர்தலை முன்னிட்டு லஞ்சங்களாக சில வாக்குறுதிகள் வழங்கி வருகின்றார்கள்.
ஜனாதிபதி அதிகூடிய காலத்தை மலையகத்திலும், வடகிழக்கிலும் தான் இரண்டு வாரங்களை கழித்திருக்கின்றார். பிரதமர் வடக்கிலும், மலையகத்திலும் தான் கழித்திருக்கின்றார். இவர்களுடைய நோக்கம் என்ன என்றால் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு தேசிய இன பிரச்சனை ஒன்று இல்லை. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்பது இல்லை. மக்கள் சோறும் தண்ணியும் மாத்திரம் தான் மக்களுடைய பிரச்சினைகள் என்று, 76 வருடங்களாக இந்த நாட்டிலே எங்களுடைய தமிழ் மக்கள் நிரந்தரமான அரசியல் தீர்வைக் கோரி வருவதை, முற்றாக அவ்வாறு ஒரு தேவை இல்லை தமிழ் மக்கள் சில சலுகைகளுக்காக மாத்திரம் தான் அரசியல்வாதிகளை நாடுகின்றார்கள் அல்லது அரசியல் ரீதியான பிரச்சினைகள் இல்லை என்று சொல்லுவதற்காகவே தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதற வைப்பதற்காக முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் இவ்விடத்தில் கவனமாக உணர்ந்து கொள்ள வேண்டும். அதே போன்று தான் உள்ளூராட்சி மன்றங்கள் என்பது மாகாணத்திற்கு பகிரப்பட்ட ஒரு விடயம். ஜனாதிபதியோ மத்திய அரசாங்கமோ இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப் போவது இல்லை. நான் நினைக்கின்றேன் முன்னாள் மாநகர சபை மேயர் அது தொடர்பாக மிக தெளிவாக கூறியிருக்கின்றார் அந்த வகையில் நமது மக்கள் இந்த தேர்தலில், இது வட்டாரத் தேர்தலையும் தாண்டி இது தமிழ் இனத்திற்கான ஒரு தேர்தலாக இதனை கருத்தில் எடுத்து இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.


