நேற்றையதினம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் சாரதி முல்லைத்தீவு – கேப்பாபிலவு மீனவ சங்க தலைவர் ஒருவரை தாக்கிய நிலையில் அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேற்றையதினம் தேர்தல் பிரச்சாரத்திற்காக முல்லைத்தீவு – கேப்பாபிலவிற்கு சென்றுள்ளார். இதன் போது அங்குள்ள மீனவ சங்கத் தலைவரை அழைத்து அவரது வீட்டுக்கு வெளியே வைத்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அந்த மீனவ சங்கத் தலைவர் தாங்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை கூறியதுடன், இந்த பிரச்சினை குறித்து கடந்த காலங்களில் பதவியில் இருந்து அமைச்சர்களிடம் தெரிவித்த நிலையில் அவர்களும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதன்போது அமைச்சர் சந்திரசேகரன் கருத்து தெரிவிக்க முயன்றபோது குறித்த கடற்தொழில் சங்க தலைவரான சுகிந்தன், நீங்கள் வாருங்கள் நந்தி கடலுக்கு சென்று நிலைமைகளை நேரில் காண்பிக்கிறேன் என தெரிவித்து அவர்களை வழிநடத்தி முன்னே செல்ல முற்பட்டார். அந்த வீதியானது மிகவும் மோசமாக காணப்பட்டது. தாங்கள் தினமும் இந்த வீதியில் தான் பயணிக்கிறோம் என்பதனை எடுத்து காட்டுவதற்கு தான் அவர் இவ்வாறு முயன்றுள்ளார்.
இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனின் கையாட்கள் அந்த மீனவ சங்கத் தலைவரை தாக்கியுள்ளனர். இதனால் அந்த மீனவ சங்கத் தலைவர் இன்றைக்கும் பய பீதியிலேயே உள்ளார். இந்த விடயத்தை நாங்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம். அவர் பொலிஸிடம் முறைப்பாடு செய்வதற்கு கூட பயத்தில் உள்ளார்.
இன்றைக்கு சரி பிழைகளுக்கு அப்பால் எத்தனையோ பேர் திட்டமிட்ட வகையில் கொல்லப்படுகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இப்படியான விடயங்களை எந்த அளவிற்கு நீங்கள் வெளியே கொண்டு வருகின்றீர்களோ அந்த அளவிற்கு அது அரசு தரப்புக்கு அழுத்தமாக மாறும் என்றார்.