மலையக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை புரிந்து கொண்டு சரியான திசையில் ஒன்றாய் பயணிக்க வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவன நிர்வாக நிர்வாகியும் சமூக செயற்பாட்டளருமான சிவனு சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தலவாக்கலை பொது மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்.
கடந்த 76 வருடங்களாக மலையகத்தின் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் அவ்வப்போது அவர்கள் விரும்பி கைக்காட்டும் வெவ்வேறு சின்னங்களுக்கு அவர்களை நம்பி மாறி மாறி மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளோம் ஆனால் மலையகத்தில் மாற்றம் ஏற்படவில்லை.
என்னுடைய தாத்தாக்களுக்கும் அப்பாக்களுக்கும் ஒரே மாதிரியான பொய் வாக்குறுதிகளை சொல்லி எமது பரம்பரையை ஏமாற்றியது மட்டும் இல்லாமல் எங்கள் காலத்திலும் அதே பொய் வாக்குறுதியான நடை பாதையை சீரமைத்து தருவதாககூறி வாக்குகளை பெற்றுகொண்டார்கள் இறுதியில் நடந்தது என்னவென்றால் தாத்தா காலத்தில் அந்த வேட்பாளர் அவருக்கென்று ஒரு வீட்டை கட்டி என்னுடைய அப்பா காலத்தில் அந்த வீட்டை பங்களாவாக மாற்றி என்னுடைய காலத்தில் அதை மாளிகையாக மாற்றிக்கொண்டுள்ளார். இது தான் அவர்களின் மலையக மாற்றம்.
ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களது வரிப்பணத்தை வீண் விரயம் செய்யாமல் அவர்கள் எந்த ஒரு வாகனமும் இல்லாமல் இன்று நாடாளுமன்றத்துக்கு செல்ல பணம் கூட இல்லாமல் பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பயணித்து அந்த வீண் செலவாகும் பணத்தை எங்களது சேவைகளுக்காக சேமிப்பு செய்கிறார்கள் இதுவே மலையகத்தின் உண்மையான மாற்றம்.
இவர்கள் சேமிக்கும் இந்த பணம் எமக்கு வந்தடையும் ஒரு இடம் தான் பிரதேச சபை. ஆகவே இந்த பணம் மூலமாக எமக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை சரியான முறையில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் முன்பை போல் இல்லாமல் ஊழலற்ற பிரதேச சபை உறுப்பினர்கள் தேவை எனவே எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும் எமது ஊழலற்ற வேட்பாளர்களை ஆதரித்து அவர்களை அமோக வெற்றி பெற செய்வதன் மூலம் எமது பரம்பரை செய்த தவறுகளில் இருந்து மீண்டெழுந்து எமது எதிர்கால சந்ததியினரின் சுபீட்சமான வாழ்க்கைக்கு வழி அமைப்போம் என்று தெரிவித்தார்.