திருகோணமலை நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (24.04.2025) திருகோணமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலாளர் கி. ஸ்ரீபிரசாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, சமூக – அரசியற் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அரங்கு நிறைந்த சனத்திரளுடன் நடைபெற்ற இக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளரும், நகர சபைக்கான தலைமை வேட்பாளருமான க. குகன் மேற்கொண்டிருந்தார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போது தமிழ்த் தேசியப் பேரவை என்னும் கூட்டணியாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த அணியில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தமிழ்த் தேசியக் கட்சி, சனநாயகத் தமிழரசுக் கட்சி ஆகியன இணைந்துள்ளன.
திருகோணமலை நகரசபை தேர்தலின் பின்னர் மாநகர சபையாகத் தரமுயர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




