ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஸ்ரீ தலதா வந்தனாவ’ சமய நிகழ்வு பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
புத்த பெருமானின் புனித தந்தத்தை பார்வையிடும் வாய்ப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வுக்கு போதியளவு ஒழுங்கமைப்புகள் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல கிலோமீற்றர் தூரம் வரையில் மக்கள் வரிசையில் காத்திருப்பதாக தெரியவருகிறது. இந் நிகழ்வை காண வருகை தந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தத்தை பார்வையிட காத்திருந்த 69, 70, 74 மற்றும் 80 வயதுடைய நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையில், ஒருவரின் மரணத்திற்கு மாரடைப்பு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.ஏனைய மூவரின் இறப்புகள் குறித்து வெளிப்படையான தீர்ப்பை வழங்கி, உடல் பாகங்களை பகுப்பாய்விற்கு அனுப்ப மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கண்காட்சியை பார்வையிடுவதற்கு வந்த சுமார் 300 பேர் பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்காக சிகிச்சை பெறுவதற்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் நீரிழப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இரேஷா பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் 9 சுகாதார மையங்கள் செயற்பட்டு வருகின்றன, கடந்த சில நாட்களில் சுமார் 3,000 பேர் அவற்றில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேவேளை, நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 07 சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சேனக தலகல தெரிவித்தார்.