மாநகரசபையின் ஆட்சி அதிகாரம் எங்களுக்கு வழங்கப்பட்டால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்றை வவுனியாவில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுயேட்சை குழு ஒன்றில் கோடாலிச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான சி.கிரிதரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.,
இதுவரை காலமும் நகரசபையை பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்திருந்தது. அவர்கள் செய்யத்தவறிய பல விடயங்கள் உண்டு. நான் நகரசபையில் சுகாதார பரிசோதகராக பணியாற்றிய போது பல்வேறு பிரச்சினைகள் இருந்தது அவற்றை நேரடியாகவே நாங்கள் அவதானித்திருந்தோம்.
அந்தவகையில் கழிவகற்றல் செயற்பாடுகளில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றது. குறிப்பாக கணவன் மனைவி ஆகிய இருவரும் அரச ஊழியர்களாக இருந்தால் அவர்கள் பணிக்கு சென்றுவிடுவார்கள். அதன் பின்னர் கழிவகற்றும் வாகனங்கள் செல்வதால் வீட்டில் யாருமில்லாத நிலையில் கழிவுகளை அகற்ற முடியாத நிலைமை இருந்தது.
இருப்பினும் எம்மால் முடிந்தவரை அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தேன். எனவே தற்போது சபையின் ஆட்சி எமக்கு கிடைத்தால் அதற்கான நிரந்தரமான ஒரு தீர்வினை எடுப்போம்.
அத்துடன் மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதிகளை பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றனர். நகர அபிவிருத்தி அதிகாரசபையே அந்த அனுமதியை வழங்குகின்றது. அந்த அலுவலகம் தற்போது யாழ்பாணத்திலேயே அமைந்துள்ளது.
மாதத்தில் சில தடவைகள் மாத்திரே அவர்கள் இங்கு வருவார்கள். இதனால் பொதுமக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்த தேர்தலில் மக்கள் எமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் ஒன்றை வவுனியாவில் திறப்பதற்கான கவனத்தை எடுப்போம் என்றார்.