இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சூரத் கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்திசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் வானத்தில் உள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சோதனை வெற்றி இந்திய கடற்படைக்கு மேலும் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். விமானம் மற்றும் தரையில் இருந்து கப்பலை தாக்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக இந்த ஏவுகணை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் பாகிஸ்தான், ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய கடற்படை நடத்திய சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.