ஹவார்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக சமீபத்தில் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், அமெரிக்காவின் 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சேர்ந்து ட்ரம்புக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளன.
கடிதத்தில், கல்வி அமைப்புகளில் அமெரிக்க அரசின் தலையீடு அதிகமாக இருக்கிறது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச அளவில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது. ஆனால் ஹவார்ட் பல்கலைக்கழக மாணவர்கள், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். எனவே பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அதை வரையறுக்கவும் நிர்வாக ரீதியில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
பல்கலையில் பன்முகத்தன்மை, சமத்துவம் உள்ளிட்டவற்றை ஆதரிக்கும் பாட திட்டங்களை மாற்றவும் இஸ்ரேல் எதிர்ப்பு மனநிலையில் உள்ள மாணவர்கள் பற்றி தெரியப்படுத்தவும் ட்ரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியிருந்தது. இதனை பல்கலைக்கழக நிருவாகம் மறுத்தது.
இதனால் அமெரிக்க அரசாங்கம் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தியதோடு மட்டுமல்லாது பல்கலையின் சார்பில் உள்ள சொத்துக்களுக்கு வருமான வரியை கொடுக்க வேண்டும் என்றும் கூறியது.
பொதுவாக கல்வி நிலைய சொத்துக்களுக்கு வரி வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் ஹவார்ட் பல்கலைக்கு மட்டும் வரி வசூல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படியான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.
இந்நிலையில்தான் அமெரிக்காவின் 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ட்ரம்ப்புக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளன.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக ,
“பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கான நிதியை அரசியல் அழுத்தம் கொடுக்க பயன்படுத்துவதையும், கல்வியில் அரசியல் தலையீட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம். சீர்த்திருத்தங்கள் அவசியமானதுதான். ஆனால் அரசின் அத்துமீறலை ஏற்க முடியாது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.