காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் அமைதி தவழும் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சோகம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரமான தாக்குதலில் குஜராத் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலியாகினர்.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த வெறித்தனமான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த கோழைத்தனமான செயல் உலக நாடுகளின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த முக்கிய குற்றவாளிகள் என நம்பப்படும் மூன்று தீவிரவாதிகளின் புகைப்பட ஓவியங்களை (Sketches) அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.