எதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றி பெறும் பட்சத்தில் மாநகரசபை அறிவித்துள்ள சோலைவரியை 5 சதவீதமாக குறைப்போம் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாநகரசபை வேட்பாளரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான சு.காண்டீபன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் ஆதன வரி 15 சதவீதமாக அறவிடப்பட்டு வருகின்றது. மாநகரத்தின் அபிவிருத்திக்கு வரி வருமானம் அவசியமாக இருந்தாலும் பொதுமக்கள் பாதிப்படையக் கூடிய வகையில் அதனை அறவிடுவது பொருத்தமற்ற ஒரு செயற்பாடகவே உள்ளது.
குறிப்பாக போர் மற்றும் பல்வேறு காரணங்களால் வடக்கு மக்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர். இந்த நிலையில் மெல்ல மீள் எழுச்சியடைந்து வரும் மக்களின் நிலை அறியாமல் திடீர் என வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளமை ஏற்கமுடியாத செயற்பாடு. எனவே அதனை மீளாய்வு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் குறித்த வரிஅறவீட்டு நடவடிக்கை நிச்சயமாக திருத்தப்படும்.
குறிப்பாக தற்போது அறவிடப்படும் 15 சதவீத வரி அறவீட்டை 5 சதவீதமாக மாற்றுவதற்கான வலுவான தீர்மானம் ஒன்று என்னால் முன்னெடுக்கப்படும். அது நிச்சயம் அமுல்படுத்தப்படும் என்பதை கூறிக்கொள்கிறேன்.
கடந்த காலங்களில் மக்கள் எமக்கு அளித்த ஆணையை திறம்பட செயற்படுத்தியவர்கள் நாங்கள் என்ற ரீதியில் வட்டாரத்தின் அபிவிருத்திக்காக இம்முறையும் எமது கரங்களை மக்கள் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.