19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு நிபந்தனையுடன் கூடிய நீதி மன்ற தடை உத்தரவினை மட்டக்களப்பு கொக்குவில், சந்திவெளி, காத்தான்குடி ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூலம் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றம் என்பனவற்றை அணுகி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் உட்பட இன்னும் சில பேருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவினைப் பெற்றிருந்தனர்.
இச் செயற்பாடானது உண்மைக்கு புறம்பான முறையில் நீதிமன்றத்தினை வழிநடாத்தி பெறப்பட்ட தடையுத்தரவாகவும், இது அடிப்படை மனித உரிமை மீறலாகவும் உள்ளதென்பதோடு இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை மீறும் செயலாக உள்ளதென மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் தெரிவித்து உள்ளார்.
அவ்வகையில் 19.04.2025 அன்று காலை விசாரனை ஒன்றிற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு காத்தான்குடி பொலிஸாரினால் சிங்கள மொழியிலான ஒரு கடிதத்தினை அனுப்பி இருந்தனர். எனவே இச் செயற்பாடானது தனக்கு இருக்கி்ன்ற மொழி உரிமையை மீறும் செயற்பாடாக உள்ளதெனவும் கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் 1988ம் ஆண்டு சித்திரை மாதம் 30ம் திகதி மட்டு அம்பாறை அன்னையர் முன்னனியின் உறுப்பினராக இருந்து 30 நாட்கள் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தின் மூலமாக தன் உயிரை ஈகம் செய்த தியாகத்தினை கொச்சைப்படுத்தும் முகமாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2011.08.29 ம் திகதி 1721/02 இலக்க அதிவிஷேட வர்த்தமானிப் பிரிவு (1) இல் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மரணித்த உறுப்பினர்களை நினைவு கூறும் முகமாக மேற்படி நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கு செய்ப்பட்டுள்ளதாக உண்மைக்கு புறம்பான வகையில் நீதிமன்றத்தினை வழிநடாத்தி தனக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் இவ் நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் பொது சமாதானத்திற்கு பங்கம் ஏற்படும் என்றும், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் பொய்யான கருத்துக்களை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்து தனக்கெதிராக வேண்டுமென்றே திட்டமிட்ட வகையில் பொலிஸார் இவ் விடயத்தில் நடந்துள்ளதாக காத்தான்குடி, சந்திவெளி, கொக்குவில், மற்றும் மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும், மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய ச.சிவயோகநாதன் அவர்கள் (21.04.2025) நண்கல் 12 மணியளவில் பதிவு செய்து உள்ளார்.


