சியோன் தேவாலயம் உட்பட இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்று இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அருட்தந்தை க. ஜேசுதாசன் அடிகளார் மற்றும் அருட்பணி பி. அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்ட மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் அவர்கள் இலங்கையின் வரலாற்றில் அப்பாவிகள் மீதும், ஆலயங்களில் வழிபடுகின்றவர்கள் மீதும் நடாத்தப்படுகின்ற எந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கும், எந்தக் கொலைகளுக்கும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லையென தெரிவித்தார்.
இதன்போது உயிரிழந்தவர்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டதுடன் தாக்குதலில் காயமடைந்து இன்னும் சிகிச்சை பெற்று வருபவர்களும், அந்த தாக்குதலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாத நிலையில் உள்ளவர்களும் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அருட்தந்தையர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவுகளினால் கண்ணீருடன் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.




