பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்திலிருந்து பிணையில் வெளியேறிய குற்றச்சாட்டில், இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப் பயன்படுத்திய காரின் உரிமையாளரையும் ஏப்ரல் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட பின்னர், தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறி, சட்டமா அதிபர் இன்று (21) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் குறித்த மனுக்கள் இன்று அழைக்கப்பட்டிருந்த போது, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து பிணை பெற்றுச் செல்லும் போது நீதிமன்ற உத்தரவை மீறிச் சென்றமையின் காரணமாக இவ்வாறு மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.