இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாமல் அற்றுப்போகும் நிலை உருவாகியுள்ளது எனவும் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து இலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த, யுனானி என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது. இந்தக் கற்கை நெறியை நிறைவு செய்து தமிழ், சிங்களம், முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காகக் காத்திருக்கின்றனர். இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர்.
இதே நேரம் மருத்துவப் பயிற்சி நெறியை முடித்தும் தம்மை பயன்படுத்தாத நிலையில் உள்ள போக்கில் இலங்கையின் சுதேச மருத்துவம் இருப்பது கவலையானது. மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் அரசு மௌனமாக இருக்கின்றது. அதை விட 9 ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமனத்தில் உள்வாங்க அரசு முனைகின்றது. ஆனால் கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாகக் கூட எம்மை பயன்படுத்த முடியும்.
இந்தப் போக்கால் இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலையே உருவாகின்றது. நாட்டில் இருக்கும் எமது வளங்களை கொண்டே மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதை அரசு முன்னெடுப்பதில்லை.
இவ்வாறன நிலையில் மேலதிக தகைமை என்று கூறி வேறு வேலைகளுக்கு கூட எம்மை இணைத்துக் கொள்கின்றார்களில்லை என்றும் கூறிய அவர் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.