தமிழ் மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற துடிக்கும் தேசிய மக்கள் சக்தியிடம் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் செல்லுமாயின் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து ஆக்கிரமிப்பு செயற்பாடுகளும் சட்ட ரீதியாக மாற்றப்படும் சூழலை தமிழ் மக்கள் கண்கூடாக பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமாகாண அமைப்பாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளருமான சுரேன் குருசாமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் 9 உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவற்றை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
எமது கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை திட்டமிட்ட ஒரு செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்ற நிலையில் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்று தீர்வைப் பெற்றுள்ளோம். உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் வழங்குவார்கள்.
தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத் தருகிறோம், அரசியல் கைதிகளை விடுவிக்கிறோம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் மற்றும் படைகளிடம் உள்ள மக்கள் காணிகளை விடுவித்துத் தருகிறோம் என வாக்குறுதிகளை அள்ளி வழங்கி மூன்று ஆசனங்களைப் பெற்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கடக்கின்ற நிலையில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவுமில்லை, பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவுமில்லை. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்பு பலாலி வீதியை மட்டும் நேர அட்டவணை விதித்து திறந்திருக்கிறார்கள்.
இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளை தமிழ் மக்கள் வெறுக்க ஆரம்பித்துள்ளவர்களை உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து தமிழ் மக்கள் விரட்ட வேண்டும். ஏனெனில் தமிழர் பகுதிகளில் சட்ட விரோத விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. மக்களுடைய நிலங்கள் தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பதற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் எங்களிடம் இருக்க வேண்டும்.மாறாக உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைக்கப்பட்டது சரிதான் என்று பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றுவார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி தமக்கும் தையிட்டி விகாரைக்கும் சம்பந்தமில்லை என பிரச்சாரம் செய்து வருகிறார். அவரிடம் நான் கேட்கிறேன் தையிட்டி விகாரை சட்டவிரோத விகாரை எனப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அந்த விகாரைக்குள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் கடந்த மாதம் புதிதாக தியான மண்டபம் பெரும் எடுப்பில் திறந்து வைக்கப்பட்டதற்கு பதில் கூற முடியுமா?
சிங்கள தேசியவாதத்தை தமிழர் பகுதிகளில் விதைப்பதற்காக விலை பேசப்பட்ட சிலர் நாம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என கூறிக் கொண்டு தமிழ் தேசியத்தை முற்றாக சிதைப்பதற்கான வேலை திட்டங்களில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு அங்கமாகவே உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களையும் கைப்பற்றி விட்டால் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியமாக பேரம் பேச முடியாத தமிழ் மக்களின் அடிமட்ட அரசியல் இலக்கான உள்ளூராட்சி மன்றங்களையும் அடிபணிய வைப்பதே அவர்களின் நோக்கம்.
தமிழ் மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும் சிங்கள தேசியவாதம் எவ்வாறு தமிழ் மக்களை பலவீனப்படுத்த முடியுமோ அந்தளவு தூரத்துக்கு நுட்பமாக இறங்கி தமிழ் மக்களின் வாக்குகளை கைப்பற்றிக் கொள்வதற்கான பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் சங்குச் சின்னத்துக்கு வழங்கிய பேராதரவை இம்முறை உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலிலும் வழங்கி தமிழ் மக்களின் இலக்குகளை அடைய முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.