உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்களில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மனுக்கள் யாழ். மாவட்டத்தில் திட்டமிட்ட சதியின் அடிப்படையில் நிராகரிப்பதற்கு வலுவான காரணங்கள் இல்லாமல், நிராகரிப்பட்ட நிலையில் எமது கட்சி உடனடியாக மேற் கொண்ட நீதிமன்ற செயற்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு சதியில் ஈடுபட்டவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அத்துடன் வட்டாரங்களில் தங்களுக்கு நெருக்கடிகளுக்கானவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை சந்தோஷமாக அனுபவித்த போட்டியாளர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் சித்தங்கேணியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க அமைச்சர் ஒருவர் தீர்ப்பின் பின்னதாக வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்றம் புண்ணியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது என உளறியதன் மூலம் சதி வலைகளின் இலக்கு தவறியதன் ஆதங்கம் எல்லோருக்கும் புரிந்துள்ளது. ஐனாதிபதி பொய் வாக்குறுதிகளை மிரட்டல் பாணியில் அள்ளி வீசி, தேர்தல் விதி முறைகளை மீறி வடக்கு, கிழக்கு தமிழர் பிரதேசங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறார். ஐனநாயகத்தை மீறி தாங்கள் வெற்றி பெறாத சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்காது என காதில் பூ சுத்த நினைக்கிறார். சாதாரண மக்களை அரசியல் தெரியாத கூட்டமாக பார்க்கிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.

