பிள்ளையான் என்பவர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவர் அவற்றை வெளியிடுவதைத் தடுப்பதற்கு ஒரு குழு முயற்சிக்கின்றது. அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவையும், சிறப்பு பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தினார்.
கடுவலையில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவார் என தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்காது சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என எவ்வாறு நம்ப முடியும்? பிள்ளையானின் கைது அனைவர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் ஏன் இதனை சரியாகக் கையாளவில்லை? உதய கம்மன்பில பிள்ளையானை தேசிய வீரர் எனக் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஏன் பதிலளிக்கவில்லை?
இது தொடர்பில் விசாரணைகளேனும் முன்னெடுக்கப்பட வேண்டும். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, பிள்ளையான் இராணுவத்துக்கு உளவுத் தகவல்களை வழங்கியமை பொய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஊடாக இராணுவத்துக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறிருக்கையில் கம்மன்பில போன்றோர் குறிப்பிடும் விடயங்கள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடியவையாகும்.
இது ஒரு பெரிய நாடகம் என்றே எமக்குத் தோன்றுகிறது. ஒருபுறம் பட்டலந்த குறித்து பேசப்பட்டது. மறுபுறம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பிள்ளையான் போன்றோரது குரலை முடக்குவதற்காக முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
பிள்ளையான் என்ற நபர் மிக முக்கிய சாட்சியாளராவார். எனவே அவருக்கு வழங்க வேண்டிய சகல பாதுகாப்புக்களை வழங்கி, அவருக்கு சுயாதீன சட்டத்தரணிகள் குழுவொன்றை வழங்க வேண்டும்.
பிள்ளையான் வாயைத் திறந்தால் எமது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளிவரக் கூடும்.
எனவே அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான பணியாளராகவே கம்மன்பில தன்னை சட்டத்தரணியெனக் காண்பித்துக் கொண்டு பிள்ளையானை சந்திக்கின்றார்.
அவரை எவரேனும் இதற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே அரசாங்கம் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.