இலங்கைத் தீவின் சுதேசிய இனமான ஈழத் தமிழினத்தின் பண்பாடு, மொழி, கலை, கலாசார, மரபியல்களையும், இனத்துவ உரிமைகளையும் பாதுகாக்கவல்ல அரசியற் கட்டமைப்பான தமிழ்த்தேசியமே எமது இருப்பின் அடிப்படையாகும் – என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, பூநகரி பிரதேச சபையின் கரியாலைநாகபடுவான் வட்டாரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஈழத் தமிழினத்தின் இருப்புக்கான அடிப்படையான தமிழ்த் தேசியத்தை அடியோடு சிதைத்தழிக்கும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலில் இயங்குபவர்கள், தமிழ்த் தேசியத்தை வெற்றுக் கோசம் என வரையறை செய்வதைக் காண்கிறோம். தனது இருப்பை நிலைநிறுத்தும் தமிழினத்தின் அடியாதாரமே அதுதான் என்பதை இந்தத் தேர்தலின் முடிவுகளே உறுதிசெய்யும் – என்றார்.
கரியாலைநாகபடுவான் வட்டார வேட்பாளர் பத்மசேனன் லிடான்ரியூடர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், இரணைதீவு வட்டார வேட்பாளர் பிலிப்றெஜினோல்ட் நிவிந்தன் ஆகியோர் உரையாற்றியிருந்ததுடன் குறித்த வட்டாரத்தின் வேட்பாளர் சுகந்தி சிவகுமார் உட்பட கட்சியின் வட்டாரக்கிளை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






