சினிமா திரைப்படங்களில் ஒரே பாட்டில் பணக்காரர்கள் ஆவது எல்லாம் நடக்கும். நிஜ வாழ்க்கையில் இது பொருந்தாது. ஆனால் ஒரு சில நேரங்களில் லாட்டரிகளால் இது போன்ற சம்பவம் நடந்து விடுகின்றன. நேற்று வரைக்கும் சாதாரண கூலி வேலை பார்த்து வருவார். லாட்டரியில் பணம் அடித்தால் மறுநாளே கோடீஸ்வரர் ஆகிவிடுவார். இது லாட்டரிகளில் மட்டும் தான் சாத்தியம்.
அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது அடிக்கும் என்றே தெரியாது என்று சொல்லும் வகையில், தற்போது சிலி நாட்டை சேர்ந்த ஒருவருக்கு குப்பையில் கிடந்த தனது தந்தையின் பழைய வங்கி கணக்கு புத்தகத்தால் அவரது தலைவிதி மாறியுள்ளது.
ஒரே நாளில் அவர் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இது குறித்த விவரத்தை இங்கு பார்க்கலாம்.
குப்பையில் கிடந்த ஒரு பொருளால் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். ஆம் இது கனவல்ல நிஜம் தான். சிலி நாட்டை சேர்ந்த ஒருவருக்கு தான் இந்த அதிர்ஷ்டம் நடந்திருக்கிறது. தனது அப்பாவின் பழைய வங்கி கணக்கு குப்பைகளில் கிடந்துள்ளது. 1960 ஆம் காலக்கட்டத்தில் உள்ள அந்த வங்கி கணக்கு புத்தகத்தினால், அந்த நபருக்கு இப்போது ரூ.9 கோடி கைக்கு கிடைத்துள்ளது. இதனால் ஓவர் நைட்டில் இவர் பணக்காரர் ஆகியுள்ளார்.
சிலி நாட்டை சேர்ந்தவர் எக்செசில் ஹினோஜோசா. இவரது தந்தை இறந்துவிட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று தன் தந்தையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக பழைய பொருட்களை எல்லாம் எடுத்துள்ளார். இதில் குப்பைத் தொட்டியில் ஏதோ ஒரு வங்கி கணக்கு புத்தகம் இவரது கண்ணில்பட்டுள்ளது. உடனே அதை எடுத்து பார்த்திருக்கிறார்.
அப்போது அந்த வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் பணம் இருந்துள்ளது. அதாவது 1960 ஆம் ஆண்டின் போது இந்த வங்கிக் கணக்கில் இவ்வளவு பணம் இருந்துள்ளது. தந்தை வீடு கட்டுவதற்காக இந்த பணத்தை சேர்த்து வைத்துள்ளார். ஆனால் இந்த பணத்தை எடுப்பதற்குள் அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்த வங்கி கணக்கு புத்தகத்தை வைத்து பணத்தை திருப்பிட எக்செசில் ஹினோஜோசா முடிவு செய்திருக்கிறார்.
ஆனால் அந்த வங்கி அப்போதே மூடப்பட்டு விட்டதாம். எனினும் அந்த வங்கி புத்தகத்தில், உத்தரவாதம் (State Guarantee) என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. அதாவது இந்த வங்கி திவால் ஆனாலும் பணத்தை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து தனது தந்தையின் பணத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அரசின் உதவியை நாடினார்.
60 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள அந்த பணத்தின் மதிப்பு இப்போது கோடிகளை தாண்டியுள்ளதாம். இந்த நிலையில் அவருக்கு அரசு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பணத்தை எங்களால் திருப்பி தர முடியாது என அரசு கூறியிருக்கிறது. எனினும் என் தந்தை கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்கிவிடக் கூடாது என்பதால் இது தொடர்பாக அவர் சட்ட உதவியை நாடியுள்ளார். இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறார்.
என்னுடைய தந்தை கஷ்டப்பட்டு உழைத்த பணம் என்றும், வங்கி திவால் ஆனாலும் அந்த பணத்திற்கு அரசு பொறுப்பு என்றும் கூறப்பட்டிருப்பதால் இந்த பணத்தை அவரது வாரிசு ஆகிய எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன் படி நீதிமன்றமும் வட்டியுடன் அந்த பணத்தை எக்செசில் ஹிஷோஜோசாவுக்கு வழங்க உத்தரவிட்டது. அதாவது ரூ.9 கோடி வழங்க அரசுக்கு உத்தரவிட்டது.
குப்பையில் கிடந்த வங்கி புத்தகத்தால் அவரது வாழ்க்கை தலைவிதியே மாறிப்போனது. பலரும் அந்த நபருக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒருசிலர் இந்த பணம் உங்களுடையது தான், என்ன கொஞ்சம் காலம் தாழ்ந்து உங்கள் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.