சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்டொக்ஹோம் ஓபன் நீச்சல் தொடரில் ஆடவருக்கான 400 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் ஜேர்மன் வீரர் லுகாஸ் மார்டென்ஸ் 16 ஆண்டுகளின் பின் புதிய உலக சாதனை படைத்தார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 400 மீற்றர் ஃப்ரீஸ்டைல் நீச்சலில் தங்கம் வென்றிருந்த ஒலிம்பிக் சம்பியனான லுகாஸ் மார்டென்ஸ் பந்தய தூரத்தை 3 நிமிடம் 39.96 செக்கன்களில் கடந்து இவ்வாறு உலக சாதனை படைத்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மற்றுமொரு ஜேர்மன் வீரர் போல் பிடர்மேன் நிகழ்த்திய சாதனையை இவர் 0.11 செக்கன்களில் முந்தி இவ்வாறு சாதனை படைத்தார். நீச்சல் வரலாற்றில் அதிக காலமாக போல் பிடர்மேன் 5,741 நாட்கள் இந்த உலக சாதனையை தன்வசம் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.