எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுகமும் தேர்தல் பிரச்சார கூட்டமும் இன்று மாலை முதலைக்குடா விக்னேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம், பட்டிப்பளை கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி உயிர்நீத்த தமிழ் தேசிய பற்றாளர்கள் மற்றும் தியாகிகளை நினைவுகூறும் முகமாக பொதுச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்காக போட்டியிடும் வட்டார வேட்பாளர்கள் 10 நபர்களும் பட்டியல் வேட்பாளர்கள் 9 நபர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மூன்று வகையான கட்சிகள் இந்த மண்ணில் போட்டியிடலாம் ஒன்று தென்னிலங்கை சார்ந்த பேரினவாத கட்சிகளின் அனுசரணையுடன் போட்டியிடுகின்ற கட்சிகள் ஒருவகை இன்னும் ஒரு வகை கட்சி இந்த தென் இலங்கை கட்சிகளுக்கு வாக்குகளை சேர்த்து கொடுக்கின்ற அல்லது தென் இலங்கை கட்சிகள் எங்கள் மீது மேற்கொள்கின்ற இடர்கள் அல்லது துயர்களுக்கு பக்க பலமாக இருக்கின்ற கட்சிகள். மூன்றாவது வகை எமது கட்சி தமிழரசு கட்சி போட்டியிடுகின்றது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முத்து பண்டாக்கள் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பது இல்லை அதேபோன்று முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் அதாவது சிங்கள இனத்தை சார்ந்தவர்களும் முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்களும் ஒருபோதும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது இல்லை. ஆனால் முத்துலிங்கம் என்ன செய்வார் என்றால் முத்துலிங்கத்திற்கும் வாக்களிப்பார் முஸ்தபாக்கும் வாக்களிப்பார் முத்து பண்டாக்கும் வாக்களிப்பார்.
இந்த நாடு பொதுவாக இனவாத ரீதியாக பிரிந்து இருக்கின்ற நாடு. சமத்துவ அடிப்படையில் சிந்திக்காத ஒரு நாடு. இந்த நாட்டில் தமிழர்கள் தமது உரிமையை பெறவில்லை தரவில்லை. இவ்வாறு இருக்கின்ற போது எங்களுடைய வாக்குகளை சிதறடிப்பதன் மூலமாக தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டது, தென்னிலங்கை சார்ந்த கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள்,பாராளுமன்ற தேர்தலில் எங்களோடு நின்றார்கள் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் எங்களோடு தான் நிற்கின்றார்கள் என்று அவர்கள் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் குரல் கொடுப்பதற்கு இந்த தேர்தல் தென்னிலங்கை கட்சிக்கு சாதகமாக அமைந்தால் அது அவர்களுக்கு வாய்ப்பாக அமையும்.இந்த சபையை கைப்பற்றக்கூடிய ஆளக்கூடிய ஒரு கட்சியாக இருக்கக்கூடிய தமிழரசு கட்சிக்கு வாக்களியுங்கள்.
கொக்கட்டிசோலையில் 1987-ல் ஒரு படுகொலை இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த காலத்தில் மகிழடித்தீவிலும் ஒரு படுகொலை இடம்பெற்றது கொத்தணி படுகொலைகளை கூறுகின்றேன். இந்த இரண்டு படுகொலைகள் இடம்பெற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 1994 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அந்த கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியினரின் காலத்தில் நடைபெற்ற படுகொலையை விசாரிப்பதற்கு முற்படவில்லை எங்களுக்கு நீதி தரவில்லை. இதேபோன்று சந்திரிகா அம்மையார் ஆட்சி செய்த காலத்தில் போது செம்மணி புதைகுழி படுகொலைகள் இடம்பெற்று குழிகளுக்குள் போட்டு மூடி விட்டார்கள் அந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வருகின்ற போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செய்த படுகொலைகளை விசாரிக்க மாட்டார்கள்.
இப்போது 77 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி எனப்படுகின்ற ஜேவிபி கட்சியினர் ஆட்சிக்கு வந்துள்ளனர். இவர்களை பொறுத்த அளவில் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் எமக்கு 56 ஆம் ஆண்டு படுகொலைகள் இருக்கின்றது 58 ஆம் ஆண்டு படுகொலை இருக்கின்றது 61 64 74 77 என தொடர் படுகொலைகள் இருக்கின்றது. அவ்வாறு என்றால் அதிகமான படுகொலை சந்தித்த இனம் தமிழ் இனம.; இதற்கான ஆணை குழுக்களை வைத்து அவர்கள் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் பட்டலந்தை படுகொலை சம்பந்தமாக அவர்கள் விசாரணை நடாத்துகின்றார்கள் வடக்கு கிழக்கிலும் விசாரணைகள் நடத்துவோம் என்று கூறுகின்றார்கள்.
ஆனால் 56,83 படுகொலைகள் மிகவும் மோசமான படுகொலைகள் இதற்கான ஒரு ஆணை குழுக்கள் அமைக்கப்படவில்லை. ஒன்று விளங்குகின்றது எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் கொக்கட்டிச்சோலை படுகொலை நடைபெற்றது பாரிய படுகொலை இடம்பெற்றது. அந்த கட்சியிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆட்கள் இருக்கின்றார்கள்,சந்திரிகா அம்மையார் காலம் ஸ்ரீமா அம்மையார் காலத்திலும் படுகொலைகள் இடம் பெற்றது. நீதி கிடைக்கவில்லை ஆனால் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். இந்தக் கட்சிகளுக்கு பக்க பலமாக ஒட்டுண்ணிகளாக அல்லது ஒட்டுறவாளர்களாக சில கட்சிகளும் இருக்கின்றன. அதற்கும் வாக்களிக்கின்றார்கள்.
எனவே தென் இலங்கைக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை அந்த கட்சிகளுக்கு ஒத்துகின்ற காட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த சபையை கைப்பற்ற கூடிய ஒரே ஒரு கட்சியை தமிழரசு கட்சி தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.


