காசா: இஸ்ரேல், காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், மீண்டும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் காசா மருத்துவமனை சேதமடைந்ததோடு மருத்துவர்கள் உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான் காசா. ஹமாஸ் எனும் அமைப்பு காசாவில் செயல்பட்டு வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கு இடையே இருந்த மோதல் தற்போது போராக மாறியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போரை தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் வரை கிட்டத்தட்ட 15 மாதங்களாக உக்கிரமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதனால், ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சக் கணக்கிலான மக்கள் பலத்த காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, போர் நிறுத்தம் காசாவில் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. இஸ்ரேல் -காசா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. காசாவின் முனையில் இஸ்ரேல் ராணுவம், பணய கைதிகளை மீட்பதற்காகவும், ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் முவாசி நகரில் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் ஒரு மருத்துவமனை சேதமடைந்தது. இதில் மருத்துவர்கள் உள்பட 10 பேர் பலத்த காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.