நாங்கள் வெற்றிபெற்றால் வவுனியா நகரப்பகுதிகளில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களும் அகற்றப்படும் என்று ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வவுனியா மாநகரசபை முதன்மை வேட்பாளர் ப.கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…
வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள நடைபாதை வியாபார நிலையங்களால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக நடைபாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பிரதான வீதிகளில் இறங்கியே பயணம் செய்கின்றனர். இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாவதுடன் போக்குவரத்து நெருக்கடி நிலையும் ஏற்ப்படுகின்றது.
வவுனியாவைப் பொறுத்தவரை இலுப்பையடிப்பகுதி, நகரபள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள வீதி, வைத்தியசாலை வீதி ஆகியவற்றில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வியாபாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே இதற்கு மாற்றுத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அந்தவகையில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நாம் வெற்றிபெற்று மாநகரசபையின் அதிகாரம் எமது கைகளுக்கு வழங்கப்பட்டால் நகரிலுள்ள அனைத்து நடைபாதை வியாபார நிலையங்களையும் நிச்சயமாக அகற்றுவோம்.
அதற்கு மாற்றீடாக பொருத்தமான இடம் ஒன்றை தெரிவுசெய்து அங்கு குறித்த வியாபார நிலையங்களை அமைப்பதற்கான முறைமை ஒன்றையும் உருவாக்குவோம்.
வடக்கில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நகரமாக வவுனியா இருக்கின்ற போதும் உரியதிட்டமிடல் இன்மையால் நகரில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டு வருகின்றது என்றார்.