வீட்டுச் சின்னத்தில் நாங்கள் பல வருடங்கள் பயணம் செய்தோம். அந்த வீடு இன்று தமிழரசுக் கட்சியின் தனி சின்னம் என்பதால் அந்த வீடு இன்று தனியாக சென்று விட்டது. ஆனால் இன்று ஐந்து கட்சிகள் இணைந்து எமக்கான ஒரு பொதுச் சின்னமாக சங்கு சின்னத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் கூட்டமைப்பாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எனவே சங்கு சின்னத்தை நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பலப்படுத்துவதன் மூலம் உங்கள் கிராமத்தையும் மன்னார் நகரத்தையும் பலப்படுத்த முடியும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக மன்னார் நகர சபை தேர்தலில் போட்டியிடும் மன்னார் எழுத்தூர் வட்டார வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் பெரியகமம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை தேர்தல் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் நகர சபையை வெற்றி பெற்று கைப்பற்றுகின்ற போது மன்னார் நகர சபையின் தலைவராக இங்குள்ள டானியல் வசந் தெரிவு செய்யப்படுவார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மன்னார் நகர சபையை கைப்பற்றுகின்ற போதே இக் கிராமத்தையும், நகர சபைக்குட்பட்ட ஏனைய கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய முடியும். பல்வேறு கட்சிகள் இன்று உங்களிடம் வாக்கு கேட்டு வந்து செல்கின்றனர்.
தற்போது இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல். உங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய வேண்டிய ஒரு தேர்தல். இத் தேர்தலுக்காக பல்வேறுபட்டவர்கள் உங்களிடம் வருகிறார்கள். எந்த கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் எமக்கு பிரியோசனம் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி தேர்தலும், அதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் ஒரு அலை காணப்பட்டது. அந்த அலையில் அனைவரும் விழுந்து என்ன செய்வது என்று இன்று தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற உள்ளது. இந்த நிலையில் நீங்கள் மீண்டும் அந்த அலையில் வீழ்ந்து தத்தழிக்காது தெளிவுடன் செயல்பட வேண்டும்.
நீங்கள் எல்லாம் தமிழர்கள். எனவே தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.
யாராக இருந்தாலும் பரவாயில்லை. முதலில் தமிழ் கட்சிகளை தெரிவு செய்ய வேண்டும். தமிழர்கள் சிங்கள தேசத்திற்கு சென்று தேர்தல் கேட்டு வெற்றி பெற முடியுமா, முடியாது.
ஆனால் இன்று எமது தமிழர் பிரதேசங்களில் எல்லா உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மைக் கட்சிகள் அதிலே குறிப்பாக ஆளும் தரப்பு மிகவும் விசமத்தனமான முறையில் இனவாத கட்சி இன்றைய தேர்தல் முறைமையை பயன்படுத்தி வட்டாரத்தில் தமது ஆட்களை நியமிக்காது, தமிழர்களை நியமித்து விட்டு, ஒவ்வொரு சபைக்குள்ளும் சிங்கள உறுப்பினர்களை உள் நிறுத்தி இருக்கிறார்கள்.
தாங்கள் எந்த சபையிலும் வெற்றி பெற முடியாது என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை நீங்களே தீர்க்க வேண்டும். எனவே சரியான கட்சியை நீங்கள் அடையாளம் காண வேண்டும்.
நாங்கள் யாரையும் குறை கூற வரவில்லை. தமிழ் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். அதில் தமிழ் கட்சிகளில் எதற்கு வாக்களித்தால் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை புரிந்து கொண்டு வாக்களியுங்கள்.
நாங்கள் அன்று முதல் இன்று வரை கூட்டமைப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். வீட்டுச் சின்னத்தில் நாங்கள் பல வருடங்கள் பயணம் செய்தோம். அந்த வீடு இன்று தமிழரசுக் கட்சியின் தனி சின்னம் என்பதால் அந்த வீடு இன்று தனியாக சென்று விட்டது.
ஆனால் இன்று ஐந்து கட்சிகள் இணைந்து எமக்கான ஒரு பொதுச் சின்னமாக சங்கு சின்னத்தில் தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் கூட்டமைப்பாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும். மக்களாகிய நீங்கள் கடந்த காலங்களில் கூறியுள்ளீர்கள் தமிழ் கட்சிகள் எல்லாம் கூட்டாக செயல்படுங்கள் உங்கள் ஒற்றுமைக்கு வாக்களிப்போம் என்று.
அந்த அடிப்படையில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எனவே ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தை நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பலப்படுத்துவதன் மூலம் உங்கள் கிராமத்தையும் பலப்படுத்த முடியும். என அவர் தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் வட்டார வேட்பாளர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.






