அமெரிக்காவின் நியுயோர்க்கின் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற தனியார் ஹெலிகொப்டர் ஒன்று நியூயோர்க் நகரத்தின் ஹட்சன் ஆற்றுப்பகுதியில் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனின் Siemens என்ற பொறியியல் நிறுவனத்திற்கு பல நாடுகளில் கிளைகள் உள்ளன. அவற்றில் ஸ்பெயினின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், தனது மனைவி மெர்ஸ் காம்ப்ருபி மற்றும் அவர்களது நான்கு, ஐந்து, 11 வயதுடைய மூன்று பிள்ளைகளுடன் நகரைச் சுற்றி சுற்றுலா சென்ற போது விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஸ்பெயின் சிஇஓ குடும்பத்தினர் மற்றும் 36 வயதான விமானி என அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கிய தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு படகுகளை அனுப்பியதாக தீயணைப்பு பிரிவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நீச்சல் வீரர்கள் உடனடியாக ஹெலிகொப்டரலில் இருந்து கடலில் விழுந்தவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் ஆனால் அது பலனளிக்கவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நால்வர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் எனவும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


