திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவானது இன்று (10) அம்பிகையின் பக்தர்களின் பேராதரவுடன் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
காலை 5.00 மணிக்கு மூலஸ்தான பூஜையும், தம்ப பூஜையும், 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் நடைபெற்று, 8.00 மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்து, விநாயகரும், முருகனும் முன்னே வர அம்பாள் தனக்கென அமைக்கப்பட்ட சித்திரத்தேரினில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சியளித்தார்.
தேருக்கு பின்னால் அம்பிகையின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதை காணக்கூடியதாக இருந்தததுடன் மாணவ மாணவிகளின் இசை, நடன நிகழ்வுகளும் மற்றும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க போதியளவிலான தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாலை 6.00 மணிக்கு மகா ரிஷப வாகனத் திருவிழாவும் பச்சைமேனி அருட்காட்சியும் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பிகையின் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




