மன்னார்-பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார சீர்கேடுகள் உடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை (9) மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தலைமையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்ட தோடு, அவற்றில் ஒரு உணவகம் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் உப்புக்குளம்-பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த இரு உணவகங்களுக்கும் திடீர் என இன்றைய தினம் புதன்கிழமை(9) சென்ற மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் குறித்த குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த உணவகத்தில் கடமையாற்றியவர்கள் சுகாதார பரிசோதனை சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமல் கடமையாற்றியமை,குளிர்சாதனப் பெட்டியில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை சேகரித்து வைத்தமை, உணவுப் பொருட்களை சுகாதாரம் இன்றி பாதுகாப்பற்ற முறையில் தயாரித்தமை உள்ளிட்ட சில குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டதோடு,உடனடியாக குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள மேலும் ஒரு உணவகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அந்த உணவகத்தில் பல்வேறு பிரச்சினைகள் சுகாதார அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.
குறித்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல்,உரிய முறையில் கழிவு நீர் வடிகான் பராமரிக்கப் படாமை,கழிவுநீர் தொட்டியில் நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்தமை உள்ளடங்களாக பாரிய சுகாதார சீர் கேடுகள் உடன் குறித்த உணவகம் இயங்கி வந்தமை அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த உணவகத்தை உடனடியாக தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளதோடு குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர் வரும் பண்டிகைக்காலங்களையோட்டி மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள உணவகங்களில் தொடர்ச்சியாக திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சுகாதார முறையில் உணவுப் பொருட்களை கையாளும் உணவகங்களில் உணவு பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதார துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளதோடு,சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை கையாளும் உணவகங்கள் தொடர்பாக முறை யிடுமாறும் சுகாதார துறையினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



