மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கிலனுஜி பிரிவில் நீண்ட நாட்களாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை கடந்த (5) திகதி மஸ்கெலிய பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குறித்த தோட்டத்தில் குடியிருப்பாளர் ஒருவர் வீட்டில் சமையல் எரிவாயு காணாமல் போயிருந்த நிலையில் அது குறித்து மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த சமையல் எரிவாயு சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து வேறோரு வீட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது.
மேலும் கடந்த வாரம் அதே இடத்தை சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவரின் ஆட்டு தொழுவத்தில் ஆடு ஒன்று காணாமல் போயிருந்த நிலையில் அது குறித்து மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டுக்கு அமைய பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்து ஆடு மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் அதே இடத்தில் அமைக்கப்பட்ட புதிய வீடுகளின் வீடு ஒன்றில் கூரை தகடுகள் களவாடப்பட்டிருந்தது. இது குறித்து தோட்ட நிர்வாகத்தின் மூலம் அன்றைய தினம் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.
இது குறித்து மேற்படி சந்தேக நபர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை அடுத்து குறித்த இருவரும் கூரை தகடுகளை தாங்களே களவாடி சென்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கடந்த 5 ம் திகதி அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இருவரையும் பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

