இலங்கையை சுயமாக எழுந்து நடக்க விடக்கூடாது என்பதில் இவர்கள் இருவரும் காட்டும் கரிசனை தான் இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார தற்கொலைக்கு காரணம்.
நான்கு கோடி மக்கள் வாழும் கனடா உலகில் அபிவிருத்தி அடைந்த G7 நாடு. தரைவழியாக ஒரு வாகனத்தில் ஓடிச்செல்லும் தூரத்தில் அமெரிக்கா எனும் உலகப்பெரு வல்லரசு இருந்தாலும் கனடா சொந்தக்காலில் எழுந்து நிற்பதால் அது G7 நாடு. அமெரிக்கா எனும் விட்டோ அதிகாரம் மிக்க நாட்டின் நண்பர்களே தான் கனடா ஆனாலும் அடிமை இல்லை. இதில் வேறு இயற்கை கொடுத்த கடும் குளிர் கால தண்டனை கனடாவிற்கு வருடத்தில் பாதிகாலம். ஆனாலும் இரண்டு கோடியே இருபது இலட்சம் பேர் வாழும் இலங்கை இயற்கையின் தண்டனை ஏதும் இல்லாத போதும் இலங்கை இன்று வங்குரோத்து நாடு.
இலங்கையை சொந்தமாக முன்னேற விடாது முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்தே குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது சீனாவும் , இந்தியாவும். அடுத்து சீன அதிபர் இலங்கை வருவாரானால் இதைவிட இந்த குட்டிக்குழந்தை பலமாக குத்துக்கரணம் அடிக்கும். இப்படியே மாறி மாறி குத்துக்கரணம் அடிப்பதை தவிர இலங்கைக்கு வேறு எந்த வழியும் இல்லவே இல்லை. அடிக்கிற குத்துக்கரணத்திற்கு பதில் ஏதாவது மகிழ்விக்க சில விடயங்களும் கிடைத்துவிடுவதால் இந்த சின்னப்பொடி ஸ்ரீலங்கா ஏதோ வாழ்ந்திட்டு போகின்றது. இதுதான் உண்மை.
1- அனுரவின் அரசியல் என்பது அரைத்த மாவை அரைப்பது தான்.
இதில் ஒன்றும் புதியதும் இல்லை பெரியதும் இல்லை. இலங்கையில் காலம் காலமாக இரண்டு அரசியல் தான் நடக்கின்றது.
1- இனவாத அரசியல்
2- ஆர்ப்பாட்ட அரசியல்
இந்த இரண்டும் அரசியலினதும் இலட்சியம் அதிகாரத்தை பிடிப்பது தான். அதற்கு பின்னரான அரசியல் என்பது எப்போதுமே பிடித்த அதிகாரத்தை தக்க வைப்பது தான். இதில் இனவாத அரசியல் பெருத்த இலாபத்தை ஆட்சியாளர்களின் கதிரைக்கு கொடுத்துவந்தது. உலக மாற்றத்தால் சற்று உறக்க நிலைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்பதால் இனவாத பூதம் சற்று படுத்து தூங்குகிறது. அது இறக்கவில்லை இன்னும். இனவாத பூதத்தை அடுத்த கட்டத்திற்கு உந்தித்தள்ளி இலங்கை இனவழிப்பு நாடு மற்றும் போர், பொருளாதார குற்ற நாடு என உலகம் பட்டியலிடவும் தடை போடவும் சிறந்த ஆரம்பத்தை வழங்கியது JVP தான்.
இந்த JVP போல இந்திய எதிர்ப்பாளர்கள் இவர்களிற்கு முன் இங்கு யாரும் இருந்ததில்லை. இப்போது இன்று இந்திய பிரதமரை எதிர்த்து வீதியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களும் இந்த JVP NPP ஆக மாறியதால் அனாதைகள் ஆன JVP இன் குழந்தைகள் தான். ஆக மொத்தம் அன்று இந்தியாவை எதிர்த்து 60 ஆயிரம் தமது தோழர்களை பலிகொடுத்தது ஏன் என விளங்கியும் விளங்காத இன்றைய பொடித்தோழர் கொடுத்தார் பார் ஒரு விருது.
தமிழ்தேசிய அரசியல்வாதிகளுடன் சந்திப்பும், பரிதவிப்பும்.
ஈழத்தமிழ் மக்களிற்கு இந்தியா ஒரு போதும் 13 ஆம் திருத்தத்திற்கு மேல் சென்று எந்த தீர்வையும் வழங்காது என்பது திண்ணம். இலங்கை அதைக்கூட வழங்காது என்பது அதைவிட திண்ணம். பிரதமர் மோடி அவர்களிற்கு சம்பந்தன் மாவை போன்ற ஆமா சாமி அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டிய அவசர தேவை இருக்கின்றது. அதை அவர்கள் ஒருபடி மேலே சென்று செய்ய முயல்வதை நாம் சம்பந்தனின் வீல்சியார் காலத்திலேயே நன்றாக உணர்ந்து கொண்டோம்.
அது தான் தமிழ் பொது வேட்பாளர். இந்த மாஜமானை இறக்க சொன்னதும் இந்தியா தான். அதற்கு முதல் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து ஆயுத இயக்க குழுக்களை அகற்ற சொன்னதும் இந்தியா தான், தமிழ் பொது வேட்பாளரை தமிழரசுக்கட்சிக்குள் இருந்து எடுத்துவர சொன்னதும் இந்தியா தான். தமிழ் சிவில் சமூகத்தை அடிக்கடி தூதரகத்திற்கு அழைத்து தூதரக முகவர்கள் தமிழ் சிவில் சமூக ஆய்வாளர்களின் வீடுகளிற்கு பெரும்பாலும் இரவு நேரங்களில் சென்று தமிழ் சிவில் சமூகத்தை இழுத்து முட்டுச்சந்தியில் விட்டதும் இந்தியா தான். முன்னாள் ஆயுதக்குழுக்களை ஒன்றாக்கியதும் இந்தியாதான். மகிந்த ராஜபக்சா இந்தியாவின் பேரையே முன்னெடுத்தார் அதே போல தமிழ் தேசிய கட்சிகள் இந்தியாவின் அரசியலையே இங்கு முன்னெடுக்கின்றன. இதுவே வெளித் தெரியாத அரசியல் உண்மை.
இனி ஈழத்தமிழர் என்னதான் செய்வது?
ஈழத்தமிழர்கள் இந்தியாவை எதிர்க்க வேண்டிய தேவையில்லை, நம்பவும் தேவையில்லை, இந்தியாவுடன் சேர்ந்து நாடகம் ஆடவும் தேவையில்லை. ஈழத்தமிழர்களிற்கான அரசியல் தீர்வு இனப்படுகொலையில் இருந்தே பிறக்கும். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா என பட்டியல் நீளும் அடுத்து பிரான்சும் , அவுஸ்ரேலியாவும் வந்து இணையும், கனடா நேரடியாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை கொண்டு சென்று நிறுத்தும். மேற்குலகு கூட்டாக வெற்றியும் பெறும். அப்போது ஈழத்தில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நிச்சயம் நிகழும் அது 2031 ஆண்டு அல்லது அதற்கு அண்மைய ஆண்டுகளில் நடக்கலாம்.
விடயம் என்னவென்றால் இந்தியாவை ஈழத்தமிழர் அன்றைய நிலையில் ஆதரவும் இன்றி எதிர்ப்பும் இன்றி வைத்திருப்பது தான். அதற்கான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை செய்ய முதுகெலும்பு உள்ள ஒரு புதிய அரசியல் கட்சி தோன்றியே ஆக வேண்டும் ஈழ மண்ணில். அதற்காக உறுதியாக உழைக்க தந்திரம் மிகக் புதிய இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இந்த பழைய குருட்டு தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நம்பி இருப்போமானால் ஈழத்தமிழரின் கதை அதே கதைதான்.