15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை விளக்கமறியலிலும், சிறுமியின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட ஆறு பேரை மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் வரும் 11 ஆம் திகதி வரை காவலில் வைக்க ஹோமாகம பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
15 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவனோடு 5 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்து ஹோமாகம தலைமையக மருத்துவமனையில் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு சந்தேக நபர்களில் மூன்று பேரையும், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்ற நான்கு பேரையும் பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
இதன் போது, ஹோமாகம தலைமையக ஆய்வாளர் பிரணீதா மனவடு, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி இன்னும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாததால், சந்தேக நபர்களை 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த விடயத்தை கருத்தில் கொண்ட நீதவான் பத்மசிறி ஜெயவர்தன, ஆறு சிறார் சந்தேக நபர்களையும் மாகொல சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்து வைக்கவும், 19 வயது இளைஞரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.