யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த வகுப்புத் தடை உத்தரவு மீளப் பெறப்பட்டிருந்த நிலையில், தற்போது விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடை சட்ட நியமனங்களுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டு அந்த மாணவனின் தரப்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்தே, அவருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடை மீளப்பெறப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாகத் தற்போது விசாரணைச் செயன்முறைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாணவனுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை ‘தவறானது’ என்று அறிவிக்கக் கோரியும், இழப்பீடு உள்ளிட்ட நிவாரணங்களைக் கோரியும் குறித்த வழக்குத் தொடரும் என்று மாணவன் சி.சிவகஜனின் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் தெரிவித்துள்ளார்.