“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பிற கட்சிகளின் அனைத்துப் பங்கேற்பாளர்களுடனும் முன்கூட்டியே பேசிப் பகிர்ந்து கொள்வதை உறுதி செய்யுங்கள். தமிழ்க் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை விட, நமது சமூகத்தின் பரந்த நலன்களில் கவனம் செலுத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.”- இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.எ.சுமந்திரனைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் இலங்கை வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பைச் சேர்ந்த ராஜ் சிவநாதன்.
ஆஸ்திரேலியாவில் இருந்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
அன்புள்ள திரு. சுமந்திரன்,
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தூதுக்குழு சந்திப்பில் நீங்கள் ஒரு பகுதியாக இருந்தால், விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் உங்கள் சொந்தக் கட்சிக்குள் மட்டுமல்ல, பிற கட்சிகளின் உறுப்பினர்களுடனும் முன்கூட்டியே அனைத்து பங்கேற்பாளர்களுடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழ்க் கட்சித் தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்ட சீரற்ற எதிர்பார்ப்புகள், குறிப்பாகத் தமிழ் சுயாட்சி தீர்வுகள் குறித்து, தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவிக்கப்படாதமை குறித்து இந்தியப் பிரதிநிதிகள் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தத் தெளிவின்மை நமது மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான முயற்சிகளைக் குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றது.
எனவே, வரவிருக்கும் இந்தக் கூட்டத்தின் போது, அனைத்து தமிழ்ப் பிரதிநிதிகளும் ஒன்றுபட்ட மற்றும் உறுதியான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியது அவசியம். கூட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் தமிழ் மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு விலைமதிப்பற்றது.
தமிழ்க் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை விட, நமது சமூகத்தின் பரந்த நலன்களில் கவனம் செலுத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இந்த விவாதங்கள் மிகுந்த தொழில்முறையுடன், குறிப்பாக உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவரின் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். – என்றுள்ளது.