என்னுடைய அரசியல் செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் எனக்கு எதிரான இன ரீதியான பிரசாரங்களை முன்னெடுத்து என் மீது சேறு பூசும் செயல்பாட்டை மன்னார் பேசாலையைச் சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்கிற பெண்மணி முன்னெடுத்து வருவதாக மன்னார் பிரதேச சபையின் வேட்பாளர் இஸ்மாயில் முஹம்மது றிலான் தெரிவித்தார்.
அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் பேசாலையைச் சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்கிற பெண்மணி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகநூல்களில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தான் அரசியல்வாதி ஒருவரின் கீழிருந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல் அண்மையில் முக நூல்களில் என் மீது அபாண்டங்களையும் பொய்களையும் கூறி என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.
இது தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தேன்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரையும், என்னையும் இன்றைய தினம்(2) விசாரணைகளுக்காக பொலிஸார் அழைத்திருந்தனர்.
பொலிஸாரின் அந்த அழைப்பை ஏற்று உரிய நேரத்துக்கு நான் சமூகமளித்திருந்தேன்.
பிரியதர்ஷினி என்கிற அந்தப் பெண்மணி அங்கு வருகை தரவில்லை.
இது தொடர்பாக பொலிஸார், என்னிடம் குறிப்பிட்டார்கள் அந்த பெண்மணி இன்று (2) வரவில்லை என்பதால் நீங்கள் இங்கிருந்து செல்லுமாறும்,தேவையான பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அந்த வகையில் நான் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நான் மன்னார் பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிடுகிறேன்.
எனவே இந்த பெண்மணியின் நோக்கம் என்னவென்றால் என்னுடைய அரசியல் செயற்பாடுகளை தடுப்பதற்காகவும் எனக்கு எதிரான இன ரீதியான பிரசாரங்களை முன்னெடுத்து என் மீது சேறு பூசும் செயல்பாட்டை இவர் செய்கிறார் என்பது புலனாகிறது.
அந்த வகையில் என் மீது இட்டுக் கட்டப்பட்டு என்னுடைய அரசியல் பாதையை தடுத்து அதன் மூலம் அவர் எதிர்பார்க்கின்ற இலக்கை அடைந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறார்.
எனவே மக்களிடம் வேண்டுவது இவர் தொடர்பில் மிகவும் விழிப்புடன் செயற்படுமாறும், இன ரீதியான பிளவுகளுக்கு இப்படிப்பட்டவர்கள் முன் நின்று செயற்படுவதை எமது மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என அவர் மேலும் தெரிவித்தார்.