வவுனியா மாநகர சபையில் கோடாரி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழு -01 பூஜை வழிபாடுகளின் பின் தமது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
வவுனியா, குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெபற்ற விசேட வழிபாடுகளின் பின் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வவுனியா மாநகர சபை குடியிருப்பு வட்டார வேட்பாளரும், சுயேட்சைக் குழுவின் தலைவருமான சி.கிரிதரன் மற்றும் மாநகரசபையில் குறித்த சுயேட்சைக் குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முதன்மை வேட்பாளர் சி.கிரிதரன்,
கடந்த காலங்களில் மக்கள் மாறி மாறி பல கட்சிகளுக்கும் வாக்களித்து வெறுப்படைந்து போயுள்ளதுடன், மக்களுக்கான சேவைகள் கூட உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் மக்களில் இருந்து ஒருவனாக இந்த ஊரைச் சேர்ந்தவன் என்ற அடிப்படையில் எமது மண்ணை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களுடன் இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளோம். உங்கள் அபிலாசைகளும், எண்ணங்களும் நிறைவேற வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக சுயேட்சைக் குழு ஒன்றிக்கும் அதன் கோடாரி சின்னத்திற்கும் உங்கள் வாக்குகளை வழங்குங்கள் என்றார்.


